**தோல்வியைத் தோற்கடிப்போம்** தோல்வியை தீர்மானிப்பது யார்?

செல்வக்குமார் சங்கரநாராயணன்

தோல்வியில் மிதப்பவரா நீங்கள்?
தோல்வி உங்களைப் பிடித்து, விடமாட்டேன் என்கிறதே! என்று
மனவருத்தம் கொள்பவரா நீங்கள்?
தோல்வியுடனே பல பயணம் மேற்கொண்டவரா நீங்கள்?
வாருங்கள்,உங்களைத்தான் நான்
தேடிக்கொண்டிருந்தேன் .உங்களுக்காக எழுதப்பட்ட இரகசியம்
இதுதான். இதை நீங்கள் படிக்க சில நிமிடங்களைச் செலவழித்தால்
போதும், உங்கள் வெற்றியை நீங்களே வடிவமைக்கக்
கற்றுக்கொள்வீர்கள்.


ஒரு செயல் நல்ல முடிவை ,அதாவது “நாம் விரும்பத்தக்க முடிவை”
நமக்குப் பரிசளிக்கும் பொழுதுகளில் அதை நாம் வெற்றியாக
எடுத்துக்கொள்கிறோம்.
அதே செயல் “நாம் விரும்பத்தகாத முடிவுகளை” இறுதியில் கொடுக்கும்
பொழுது அதை நாம் தோல்வி என்கிறோம். ஆனால் இது பாதி
உண்மை பாதி பொய். அது என்ன பாதி உண்மை, பாதி பொய்
என்றவாறு சிந்திக்கிறீர்களா? இதோ சொல்லிவிடுகிறேன் அதை. ஒரு
செயல் கொடுக்கும் “முடிவுகளை” வைத்து தான் வெற்றி, தோல்வி
தீர்மானிக்கப்படுகிறது என்று சொன்னேன் அல்லவா, அது எப்படி
சாத்தியமாகிறது. செயலுக்கு உயிர் இருக்கிறதா? நிச்சயம் எனக்குத்
தெரிந்தவரையில் இல்லை என்பேன்.ஏனென்றால் அந்த செயல்
உயிருள்ள நம்மால் தான் நிகழ்த்தப்படுகிறது.ஆக நாம் நல்ல முடிவைக்
கொண்டுவந்தால் அது வெற்றி என்றும் , நாம் விரும்பத்தகாத
முடிவைக் கொண்டு வந்தால் தோல்வி என்றும் நமக்கு அவை
அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 

மேலே உள்ள வெற்றி, தோல்வி விளக்கங்களைப் படித்தவுடன் சற்றே
தெளிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.இது தான் இன்றுவரை
இயல்பாக நடந்து கொண்டிருப்பது.நீங்களே சொல்லுங்கள் நம் வெற்றி
,தோல்வியை தீர்மானிப்பது யார்? ஆம் நாம் தான் அந்தக் கேள்விக்கு
சரியான விடை. நீங்கள் வெற்றியிலிருந்து விலகி தோல்வியைத்
தழுவியதற்கும் காரணம் நீங்கள் தான்.

“தோல்வியை விட வெற்றியை நீங்கள் எளிதில் தொட்டுவிடலாம்”
என்றால் என்னை பைத்தியக்காரன் என்பீர்கள்.இருக்கட்டும்
சொல்லிவிட்டுப் போங்கள்.ஆனால் நான் மேற்கோளிட்ட வார்த்தை
தான் உண்மையும் கூட. வாருங்கள் அதை எளிமையாய்
விளக்குகிறேன். 


தோல்வியை நீங்கள் பெறுவதற்கு கடின உழைப்பின்மை,
சோம்பேறித்தனம், அசட்டுத்தனம், ஆர்வமின்மை இன்னும் சில
இத்யாதி இத்யாதிகள் என்று உங்களுக்குள் இருக்கும் பல “வேண்டாத
குணங்களை” அடுக்கிக்கொண்டே செல்லலாம்.அவை தான்
வேண்டாத குணங்கள் என்று உங்களுக்குத் தெரிந்தாயிற்றே! பிறகு
ஏன் தயக்கம், தூக்கி வீசுங்கள் அவற்றை உங்களுக்குள் இருந்து
முழுவதுமாக.
ஆனால் வெற்றி பெறுவதற்கு நம்பிக்கையும்,முயற்சியும்,பயிற்சியும்
மட்டுமே போதும். 

நன்றாக இப்பொழுது உங்கள் கண்களை மெதுவாக மூடி சிந்தியுங்கள்
.(உங்களை நான் தியானிக்கச் சொல்லவில்லை ,சொன்னாலும் நீங்கள்
இப்பொழுது செய்யப்போவதும் இல்லைதானே) .
நான் சொல்லியவற்றை மெதுவாக உள்ளூற
நினைத்துப்பாருங்கள்.தோல்வியை விட வெற்றி பெறுவது எவ்வளவு
எளிமையென்றும், அதனால் கிடைக்கப்போகும் மகிழ்ச்சியையும் ,
பேரானந்தத்தையும் உங்களுக்குள் நினைத்துப் பாருங்கள் ஒரு பத்து
வினாடிகள் மட்டும். இனி நீங்கள் செய்யும் செயல்கள் எல்லாம்
வெற்றிதான்.இனிபாருங்கள் நீங்களே நினைத்தாலும் தோல்வியை
உங்கள் செயல்கள் தேடிச்செல்லாது!! அட வாருங்கள் தோல்வியைத்
தோற்கடிக்கலாம் .

-செல்வக்குமார் சங்கரநாராயணன்

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker